கவர்னரிடம் வாபஸ் கடிதம் - சபாநாயகரிடம் ஆதரவு கடிதம்: ஜக்கையன் எம்.எல்.ஏ. தடுமாறியது ஏன்?

கவர்னரிடம் வாபஸ் கடிதம் - சபாநாயகரிடம் ஆதரவு கடிதம்: ஜக்கையன் எம்.எல்.ஏ. தடுமாறியது ஏன்?

தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்த ஜக்கையன் இப்போது எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி கவர்னர் மாளிகைக்கு சென்று தனித்தனியாக கவர்னரிடம் கடிதம் கொடுத்து விட்டு வந்தனர். அதில் 19 பேரில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையனும் ஒருவர்.

இவர்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் டி.டி.வி. தினகரன் 2 வாரமாக பாதுகாத்து வைத்து இருந்தார். அங்கு தங்கி இருந்த ஜக்கையன் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ராஜ உபசாரம் மட்டுமின்றி கவனிப்பும் இருந்தது.

இதையறிந்து அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாசலம் கலைச்செல்வன் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி சொகுசு விடுதிக்கு சென்று தங்கினார்கள்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி அணிமாறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்க எஸ்.கே.டி. ஜக்கையன் நேற்று மதியம் 12.30 மணிக்கு தலைமை செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி அணிக்கு வந்துவிட்டதாக கூறி தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அமைச்சர் வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

12 நாட்களாக டி.டி.வி. தினகரனை ஆதரித்து சொகுசு விடுதியில் இருந்த ஜக்கையன், அ.தி.மு.க.வில் அவைத்தலைவர் பதவி அல்லது தலைமை நிலைய செயலாளர் பதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு டி.டி.வி. தினகரன் ‘இல்லை’ என்று சொல்லாமல் ‘பொறுத்திருங்கள்’ என்று கூறி இருக்கிறார். ஆனால் அதற்குள் மனம் மாறி எடப்பாடி பக்கம் வந்து விட்டார்.

நான் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தினகரன் அணியில் இருந்தேன். தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளேன். பணத்துக்காகவோ அல்லது பதவிக்காகவோ அணி மாறவில்லை.

என்னைப் போலவே தினகரன் அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஜெயலலிதா உருவாக்கி கொடுத்த இந்த அரசை கலைக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னரிடம் ஏற்கனவே இவர் எடப்பாடிக்கு அளித்த ஆதரவு வாபஸ் கடிதம் இன்னும் அப்படியே உள்ளது. அந்த கடிதத்தை ஜக்கையன் வாபஸ் வாங்காமல் உள்ளார். எனவே கவர்னர் மாளிகைக்கு சென்று ஜக்கையன் தனது நிலைபாட்டை மாற்றி கவர்னரிடம் மீண்டும் விளக்க கடிதம் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.

சசிகலா குடும்பத்தினரால் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வாங்கிய ஜக்கையன், டி.டி.வி. தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்தவர் இப்போது திடீரென எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் யாரையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

இதற்கிடையே கம்பம் புதுப்பட்டி பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பாக தினகரனின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி ஜக்கையன் எம்.எல்.ஏ உருவபொம்மையை தீயிட்டு எரிக்க முயன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com