எவின் லீவிஸ் ருத்ரதாண்டவம்: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் எவின் லீவிஸின் அதிரடி சதத்தால் 191 ரன்கள் இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.
எவின் லீவிஸ் ருத்ரதாண்டவம்: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி
Published on

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் எவின் லீவிஸின் அதிரடி சதத்தால் 191 ரன்கள் இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.

கிங்ஸ்டன் நகரில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி-20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர். 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் நான்கு பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

பின்னர், களமிறங்கிய ரிஷு பாந்த் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களில் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை தொடங்கியது. டி-20 போட்டிகளில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கிய எவின் லீவிஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆட்டத்தின் போக்கை தொடக்கத்திலேயே மாற்றி விட்டனர். ஆட்டத்தின் 9-வது ஓவரில் அதிரடி மன்னன் கெயில் 20 ரன்களில் வெளியேறினாலும், லீவிஸ் இந்திய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார்.

சிக்சர்களும், பவுண்டரிகளுமாக லீவிஸ் அதிரடி காட்ட இந்திய வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். 24 ரன்களில் அரைச்சதமடித்த லீவிஸை கட்டுப்படுத்த இந்திய பவுலர்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் புஸ்வானமாகி போனது. மற்றொரு பக்கம் தன் பங்குக்கு சாமுவேல்ஸ் பவுண்டரிகளை விளாச, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு சிறிது சிறிதாக மங்கியது.

9 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் லீவிஸ் 54 பந்துகளில் சதமடித்தார். முகம்மது சமி மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சை இருவரும் இணைந்து நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் 19வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com