உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
குல்புதின் நைப் அவுட் ஆகி வெளியேறிய காட்சி.
குல்புதின் நைப் அவுட் ஆகி வெளியேறிய காட்சி.
Published on

லீட்ஸ்:

உலக கோப்பை கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 39 ரன்களிலும், நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஷாய் ஹோப் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லத் ஜட்ரன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குல்புதீன் நைப் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரஹமத் ஷா உடன் ஜோடி சேர்ந்த இக்ராம் அலி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் ரஹமத் ஷா 62 ரன்னிலும், இக்ராம் அலி 86 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில்  பிராத்வெட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com