சக்கரவியூகத்தில் மாட்டி இருக்கும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்: திவாகரன்

மகாபாரதத்தில் அபிமன்யுபோல, சக்கரவியூகத்தில் மாட்டி இருக்கும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார்.
சக்கரவியூகத்தில் மாட்டி இருக்கும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்: திவாகரன்
Published on

தஞ்சாவூர்:

அ.தி.மு.க.(அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டாக்டர் சிவக்குமார் ஆகியோரின் மாமியாருமான சந்தானலட்சுமி (வயது 69) நேற்று முன்தினம் மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் தஞ்சை மேல வஸ்தாசாவடி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு தொண்டர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தனது மாமியாரின் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டி.டி.வி.தினகரன் தஞ்சைக்கு வந்தார். அவருக்கும், சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், இருவரும் எதிரும், புதிருமாக இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்தநிலையில் தினகரனும், திவாகரனும் நேற்று சகஜமாக பேசி, அருகருகே அமர்ந்து இருந்தனர். இதனால் இவர்களுக்குள் நிலவி வந்த பிரச்சினை சுமுகமாகி சமரசம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாவது:-

அண்ணி(சந்தானலட்சுமி) இறந்த செய்தியை அறிந்து உறவினர்கள், தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஏன் வரவில்லை? என்று கேள்வி கேட்கிறீர்கள். துக்க நிகழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வராமலும் போகலாம். யாருக்கும் அரசியல் நெருக்கடி இல்லை. இதை அரசியலாக பார்க்க தேவையில்லை.

கட்சி என்பது வேறு. ஆட்சி என்பது வேறு. பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் வராவிட்டாலும் தொண்டர்கள் வந்து எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். பொதுச்செயலாளர் சிறையில் இருக்கிறார். அ.தி.மு.க.விற்கு இது சோதனையான காலக்கட்டம். அதை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம்.

மகாபாரதத்தில் போர்க்களத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொள்வார். அப்போது கிருஷ்ண பரமாத்மா அங்கே இருக்கமாட்டார். சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைபோல் அ.தி.மு.க. மாட்டிக் கொண்டுள்ளது. அதை மீட்டெடுத்து எங்களது இலக்கை அடைவோம்.

எனக்கும், தினகரனுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அவர் எனது மூத்த சகோதரியின் மகன். நீரடித்து நீர் விலகாது. எங்கள் இருவருக்கும் பிரச்சினையே இல்லாத போது நடராஜன் எப்படி பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும். எடப்பாடி பழனிசாமி நல்லமுறையில் ஆட்சி செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறும்போது, ‘துக்க நிகழ்ச்சியை யாரும் அரசியலாக்க வேண்டாம். அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com