திட்டமிட்டு விளையாடி வென்றோம்: சேப்பாக் வீரர் தமிழ் குமரன் பேட்டி

திட்டமிட்டு விளையாடி நாங்கள் வெற்றி பெற்றோம் என்று திருச்சி வாரியர்சை வீழ்த்தியதை அடுத்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர் தமிழ்குமரன் தெரிவித்தார்.
திட்டமிட்டு விளையாடி வென்றோம்: சேப்பாக் வீரர் தமிழ் குமரன் பேட்டி
Published on

திண்டுக்கல்:

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி வாரியர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் நடந்த இந்த ஆட்டம் மழையால் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது.

பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தகுதி பெற்றது.

அந்த அணி ஏற்கனவே திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகளை வீழ்த்தி இருந்தது. தூத்துக்குடி பேரியாட்சிடம் மட்டும் தோற்று இருந்தது.

திருச்சி வாரியர்சை வீழ்த்தியது குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் தமிழ்குமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் திட்டமிட்டு விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றாற்போல் திட்டம் வகுத்து வைத்து இருந்தோம். அதை சிறப்பாக செயல்படுத்தினோம்.

எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் கோபிநாத், தலைவன் சற்குணம் நன்றாக விளையாடுகிறார்கள். இது எங்கள் அணிக்கு நல்லதாக இருக்கிறது. அந்தோணிதாஸ் சூழ்நிலைக்கு ஏற்றவாறு களம் இறக்கப்படுகிறார். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

மழை பெய்ததால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. ஆனாலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கில் பந்து வீசினோம். எனது பந்து வீச்சு திருப்திகரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com