

விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயபாண்டி (வயது 40).
கடந்த சில மாதங்களாக ஜெயபாண்டி தனது தந்தையிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு தொந்தரவு செய்து வந்தார். ஆனால் மாரியப்பன் தற்போதைக்கு சொத்துக்களை பிரித்து தர முடியாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜெயபாண்டி கடைக்கு சென்று தந்தையிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாரியப்பன் வச்சக்காரபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயபாண்டியிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
இதனால் தந்தை மீது ஆத்திரம் அடைந்த ஜெயபாண்டி இன்று ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார். சொத்துக்களை உடனே பிரித்து தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.
இதுகுறித்து தகவலறிந்த வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயபாண்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர் சமரசம் அடைந்து கீழே இறங்கி வந்தார்.
அதைத்தொடர்ந்து ஜெயபாண்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தினால். அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews