விழுப்புரத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விழுப்புரத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சாலை மறியல்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி மூலம் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் வசிக்கும் பலர் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி திருட்டுத்தனமாக தண்ணீரை எடுத்து வருகிறார்கள்.

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு வருவதால் பெரும்பாலான வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்பு அவர்கள் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

எங்கள் பகுதியில் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம் என்றனர். உடனே போலீசார் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலைமறியல் போராட்டத்தால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com