வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை

வில்லியனூர் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை
Published on

பாகூர்:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை ரோட்டில் வசித்து வருபவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ண வேணி (25). இவர்களுக்கு ஜெய்கணேஷ் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

குடும்பத்தை வழிநடத்தி செல்ல கிருஷ்ணவேணியும் அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

அதுபோல் நேற்றும் கிருஷ்ணவேணி கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், இரவு நேரமாகியும் கிருஷ்ணவேணி வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை கரிக்கலாம்பாக்கம்- பாகூர் ரோட்டில் உள்ள குளத்தின் அருகே கிருஷ்ண வேணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அசோக்கரிக்க லாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கிருஷ்ண வேணியின் 2 கைகளும் கட்டப்பட்டு கவிழ்ந்த நிலையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டனர். அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மேலும் கிருஷ்ண வேணி தலையில் சூடி இருந்த பூ வாடாமல் அப்படியே இருந்தது.

அதோடு பிணத்தின் அருகே ஒரு சாக்கு விரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணவேணியை யாராவது உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது கணவர் அசோக் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் கிருஷ்ணவேணியை அவரது கணவரே கொன்று இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கிருஷ்ண வேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் காரணமாக கரிக்கலாம் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com