தினேஷ் கார்த்திக் 95 ரன்கள்: சர்வீசஸ் அணியை 82 ரன்னில் சுருட்டி தமிழ்நாடு 212-ல் அபார வெற்றி

தினேஷ் கார்த்திக் 95 ரன்களும், ஹரி நிஷாந்த் 73 ரன்களும் சேர்க்க, சர்வீசஸ் அணியை 212 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
Published on

விஜய் ஹசாரே டிராபியின் இன்றைய 2-வது நாளில் ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - சர்வீசஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சர்வீசஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய தமிழ்நாடு அணி ஜெகதீசன் (14), அபிநவ் முகுந்த் (1), சாய் கிஷோர் (15), பாபா அபரஜித் (17) விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. 55 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தது.

ஹரி நிஷாந்த் 71 பந்தில் 73 ரன்களும், தினேஷ் கார்த்திக் 91 பந்தில் 95 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். முகமது 15 பந்தில் 36 ரன்கள் சேர்க்க தமிழ்நாடு அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது.

பின்னர் 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சர்வீசஸ் அணி களம் இறங்கியது. தமிழ்நாடு அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சர்வீசஸ் அணி 19.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 82 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கே விக்னேஷ் ஐந்து விக்கெட்டும், எம் முகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com