

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
ஊழியர்களின் வருகை பதிவேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.