நாகமலை புதுக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை

விடுதலை சிறுத்தையின் கட்சியின் ஒன்றிய துணை அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நாகமலை புதுக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Published on

நாகமலை புதுக்கோட்டை:

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சி அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்தழகு (வயது 36). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

நேற்று வடபழஞ்சியில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவர் பங்கேற்றார். அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டார்.

இரவு 9 மணியளவில் அவரது செல்போனுக்கு மனைவி அருள்மொழி அழைத்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கணவரை தேடி அருள்மொழி வெளியே வந்தார். அப்போது வீட்டு வாசலில் முத்தழகு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை யாரோ மர்ம மனிதர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முன் விரோதத்தில் கொலை நடந்ததா? அல்லது அரசியல் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி முத்தழகு உறவினர்கள் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை-தேனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com