துணைவேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?: ஆதாரங்களை திரட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார்

பேராசிரியர் பணியிடங்களுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்தவர்களின் ஆதாரங்களை திரட்டுவதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியர் தர்மராஜ் - தொலைத்தூர கல்வி இயக்குனர் மதிவாணன்
பேராசிரியர் தர்மராஜ் - தொலைத்தூர கல்வி இயக்குனர் மதிவாணன்
Published on

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் துணைவேந்தர் கணபதி(67) கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

இவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்தனர். தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் என்பவரும் அவரது லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணைவேந்தர் கணபதி 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற சில மாதங்களில் 82 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பினார். ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் இந்த பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியதாக புகார்கள் எழுந்தன.

தற்போது துணைவேந்தர் கணபதி கையும், களவுமாக சிக்கியிருக்கும் நிலையில் அவரது பணி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்களின் தகுதியையும் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கணபதியால் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் போல மேலும் சில பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் துணைவேந்தரின் லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகின்றனர்.

பாரதியார் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி மையங்கள் உரிய அங்கீகாரம் இல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதிலும் துணைவேந்தர் கணபதி கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், தொலைதூர கல்வி மைய அலுவலர்கள், துணைவேந்தரின் அலுவலக உதவியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

லஞ்ச வழக்கில் கையும், களவுமாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பணிகாலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் பணியிடங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அவர் வராவிட்டால் அடுத்தக்கட்டமாக சம்மன் அனுப்பப்படும்.

துணைவேந்தரின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணையின் இறுதியில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com