

எடப்பாடி பழனிசாமி- தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் பேட்டி கொடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
அ.தி.மு.க.வை விட்டு சசிகலா, தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திருத்தணி அரி எம்.பி. நேற்று ஆவேசமாக கூறி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா பற்றி பேச அரி எம்.பி.க்கு அருகதை இல்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறி உள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவுடன் 33 வருடம் உடனிருந்து அனைத்து பணிகளையும் கவனித்தவர் சின்னம்மா (சசிகலா). அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தபோது திருத்தணி அரியும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்தான்.
ஆனால் இன்று சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் தாமாகவே அனைவரும் அ.தி.மு.க.வை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறார். இதை சொல்ல திருத்தணி அரிக்கு என்ன தகுதி உள்ளது? அரி ஒரு அரசியல் புரோக்கர். தலைமை செயலகத்தில் அமைச்சர்களின் அறையில் ஏதோ ஒரு காரியம் சாதிக்க காத்து கிடப்பவர்.
சசிகலா மூலம் அ.தி.மு.க.வில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்தவர்கள் அதிகம். எனவே சசிகலா பற்றி பேச அ.தி.மு.க.வில் யாருக்கும் அருகதை இல்லை.
அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பத்தினர் கோடி கோடியாக சம்பாதித்து வளர்ந்தார்கள் என்று அரி இப்போது சொல்கிறாரே? அப்படியானால் போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே? தைரியம் இருக்கிறதா?
இவருக்கு எம்.பி. பதவி யார் மூலம் கிடைத்தது? அப்போது ஏன் இதையெல்லாம் அவர் சொல்லவில்லை.
நால்வர் அணியில் இருந்து வந்த திருத்தணி அரி, அம்மா படத்தை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியவர். அ.தி.மு.க. கட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் சின்னம்மா தலைமையில் டி.டி.வி. தினகரன்தான் அதை வழிநடத்தி செல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
அரி இப்போது இது போன்று பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அன்றைக்கு கூவத்தூரில் சசிகலா 2 நாள் இல்லை என்றால் இன்றைக்கு ஆட்சி இருந்திருக்காது. கட்சி நடுரோட்டுக்கு போய் இருக்கும். நன்றி இல்லாமல் அரி பேசுகிறார்.
எனவே அரி போன்றவர்களின் பேச்சுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவரை எச்சரிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சி இயங்கும். டி.டி.வி.தினகரன்தான் கட்சியை வழி நடத்துவார். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.