

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முன்னணி நபராக செயல்பட்டு வரும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. இன்று காலை புதுவை சென்றார்.
அவர் ஓட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெற்றிவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இங்கு வந்தவர்கள் யாரும் எதிர் அணிக்கு செல்லவில்லை. சொந்த பணிகளுக்காக வெளியே சென்ற அனைவரும் திரும்பி வந்து விட்டனர். எங்கள் அணியில் சிலர் வெளியேறி விட்டதாக தவறான தகவலை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை.
இங்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிலிப்பர் செல்களாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் என எங்கள் பக்கம் 35 பேருக்கு மேல் உள்ளனர். அவர்கள் ஒரு போதும் எங்களை விட்டு செல்ல மாட்டார்கள்.
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளோம். அதர்மத்துக்கு எதிராக போராடி வருகிறோம். தற்போது கட்சி எங்களிடத்தில் தான் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி கூட்டும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த கூட்டமே செல்லாது.
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திக்க உள்ளனர். 5 நபர்களாக சென்று அவர்கள் சந்திப்பார்கள். இன்று 5 பேர் அவரை சந்திக்க செல்ல உள்ளனர். தினகரன் அ.தி.மு.க.விலே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். இதை சொல்வதற்கு அவர் யார்?
மாணவி அனிதா சாவுக்கு இந்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வே நடந்திருக்காது.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.