ஊழலில் பங்குபோட ஓ.பி.எஸ். இணைகிறார்: வெற்றிவேல் எம்.எல்.ஏ. பாய்ச்சல்

ஊழலில் பங்குபோட ஓ.பன்னீர் செல்வம் இணைகிறார் என்றும் இருவரும் இணையும் போது பெரிய நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஊழலில் பங்குபோட ஓ.பி.எஸ். இணைகிறார்: வெற்றிவேல் எம்.எல்.ஏ. பாய்ச்சல்
Published on

சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரு அணிகள் பல பேரங்களால் இணையலாம். இதற்காக நிறைய பேரம் பேசப்பட்டுள்ளது. எடப்பாடி அணி ஓ.பி.எஸ்.சுக்கு துபாயில் ‘செட்டில்மென்ட்’ செய்து விட்டதாக எங்களுக்கு தகவல் வருகிறது.

பதவிக்காக எம்.ஜி.ஆருடன் இருந்த தொண்டர்களை நடுரோட்டில் விட்டுவிட்டார்கள். இதே ஓ.பி.எஸ். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இரட்டை இலையை முடக்கினார். சட்டசபையில் இந்த அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்தார். இப்போது இரு அணிகளும் இணைவதாக சிரித்தப்படி கூறுகிறார்.

துபாயில் பேரம் படிந்து விட்டதால் அவர் சிரிக்கிறார். இந்த இணைப்பை 98 சதவீதம் பேர் எதிர்க்கும் போது பதவிக்காக பேரம் நடத்தியுள்ளனர். எங்களது சிலிப்பர்செல் மூலம் இந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.

அ.தி.மு.க.வில் தொண்டர்கள் பலம் டி.டி.வி.தினகரன் பக்கம்தான் உள்ளது. மேலூர் பொதுக் கூட்டத்தில் தொண்டர்கள் இதை நிரூபித்துள்ளனர். 11 பேருடன் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் போது, 41 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட நாங்கள் எங்களது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்கமுடியும். இதை வருங்காலத்தில் பார்ப்பீர்கள். தொகுதி மக்களின் கருத்தை எம்.எல்.ஏ.க்கள் கேட்டார்களா? என்று கேட்ட ஓ.பி.எஸ். இப்போது மக்களின் கருத்தை கேட்டாரா? இவர் தொகுதியிலேயே இவருக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது.

கிணறு பிரச்சினையை தீர்க்க முடியாமல் சென்னையில் பதுங்கி இருந்தவர் தான் ஓ.பி.எஸ்.. எடப்பாடி அரசு ஊழல் அரசு என்று ஓ.பி.எஸ்., மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட பலர் கூறி வந்தனர். போராட்டமும் அறிவித்தனர்.

ஆனால் இப்போது இரு அணிகள் இணையும் போது ஊழல் மறைந்து விடுமா? இந்த ஆட்சியில் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரமாக இல்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் அமைச்சரே கமி‌ஷன் கேட்கிறார். முதியோர் உதவி தொகை பெறுவதற்கும் கமி‌ஷன் கேட்கிறார்கள்.

இப்படி பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எனவே ஊழலில் பங்கு போட ஓ.பி.எஸ். இணைக்கிறாரா? இவர்கள் இருவரும் இணையும் போது பெரிய நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

எங்களுக்கு கட்சிதான் முக்கியம். ஆட்சி இரண்டாம் பட்சம்தான். இந்த ஆட்சியை முதலில் ஓ.பி.எஸ். குத்தினார். இப்போது இ.பி.எஸ். முதுகில் குத்துகிறார். இருவரும் சேர்ந்து அம்மா ஆட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர்.

போயஸ் கார்டனில் உள்ள அம்மா வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றப்போவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருக்கும் போது அவர் ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். போயஸ் கார்டன் வீடுதான் சசிகலாவுக்கும் முகவரியாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வீட்டை நினைவிடமாக மாற்ற முயற்சித்தால் அதை சட்ட ரீதியாக சந்திப்போம்.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை கூட்டம் நடைபெறுவதாக தெரிகிறது. ஆனால் எங்களுக்கு அழைப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com