

சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெற்றிவேல் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார். சில மணி நேரத்துக்குள் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவின.
இது தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் வெற்றிவேல் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களை ஒருங்கிணைத்து வெற்றிவேல் மீது அண்ணா சதுக்கம், தண்டையார் பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. வெற்றிவேல் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற தகவல் பரவியது.
இதனால், அவர் முன்ஜாமீன் கேட்டு முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் 22-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வெற்றிவேல் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.