

புதுடெல்லி:
நதிகளை மீட்பது தொடர்பான விழிப்புணர்வை நாடெங்கிலும் உருவாக்க கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் செப்டம்பர் 3-ந்தேதி கோவையில் பேரணி தொடங்கினார்.
குமரி முதல் இமயம் வரை 30 நாட்களில் சுமார் 10000 கிமீ தாமே வாகனம் ஓட்டி 16 மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நிகழ்த்தினார். நேற்று புதுடெல்லியில் இப்பயணத்தை நிறைவு செய்தார்.
இதையொட்டி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்தது.
இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ஹர்ஷவர்தன், மகேஷ் ஷர்மா பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
அனைவரும் நதிகளை மீட்க உறுதி எடுக்க வேண்டும். இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பிலும் இருந்து வந்து கொண்டிருக்கும் ஆதரவை பார்த்து கொண்டிருக்கிறேன். நம்நதிகளை மீட்க ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும். ஒரு மிஸ்டுகால் குடுப்பது பெரிய விஷயம் இல்லை. அனைவரும் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்கள், பொது மக்கள் அனைவரும் நதிகளை காக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஒன்றிணைய வேண்டும். இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி உள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது. இந்த முயற்சியை கையில் எடுத்ததற்கு சத்குரு அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன். இந்த இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, விவசாயம் என்று அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். நதிகளை மீட்போம் என்ற இந்த இயக்கம் தேசத்தை புதுப்பிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.