தமிழை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்: கி.வீரமணி

நூல் வெளியீட்டு விழாவில் தமிழை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார். #Veeramani #VijayendraSaraswathi
தமிழை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்: கி.வீரமணி
Published on

சென்னை: 

சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றபோது, விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நின்றார். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர், தமிழை அவமரியாதை செய்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது விஜயேந்திரர் எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழை அவமதித்த செயலுக்கு விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

‘கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் தள்ளாத வயதில்கூட கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றினார்.  

ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, விஜயேந்திரர் எழுந்து நிற்க மறுத்து, அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது? சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என வீரமணி கூறியுள்ளார். #tamilnews #Veeramani #VijayendraSaraswathi

X

Maalai Malar
www.maalaimalar.com