

சென்னை:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பறவைகள் பாதிக்கப்படுகிறது என்று சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், காஞ்சிபுரம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆய்வுக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையில், ‘மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வேடந்தாங்கல் ஏரி மற்றும் விவசாய நிலங்களில் கலக்கிறதா? என்பதை கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு கிடைக்கப்பெற்றதும் வேடந்தாங்கல் சரணாலய பகுதியில் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பதை மதிப்பிட வேண்டி உள்ளது. பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க வேண்டியது உள்ளது. எனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், 2 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.