பாடியூரில் தொடரும் சோகம்- மில் வேன் மோதி மகன் கண் முன் தந்தை பலி

திண்டுக்கல் அருகே பாடியூரில் மகன் கண் முன் தந்தை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள பாடியூரில் நேற்று தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த வேன் தலை குப்புற கவிழ்ந்து விழுந்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதே பள்ளியில் பாடியூர் புதுப்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 38) மகன் சரவண சீனிவாசன் (5) 1-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் ராமராஜ் சென்றார். மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது பாடியூர் புதுப்பட்டி பிரிவு சாலையில் எதிரே வந்த மில் வேன் பயங்கரமாக மோதியது.

இதில் ராமராஜ் மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே ராமராஜ் தனது மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

சரவண சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். விபத்தை ஏற்படுத்திய தனியார் வேன் ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் மில் வேன்கள் அத்து மீறலால் நேற்று ஒரே நாளில் 2 விபத்துகள் நடந்துள்ளது. இந்த வேன் ஓட்டுனர்கள் பெரும்பாலும் ஆர்.சி. பெர்மிட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் சமயங்களில் முறைகேடாக இயக்கப்படும் ஆட்டோக்கள், வாகனங்கள் மூளையில் ஒளிந்து கொள்கின்றனர். ஆனால் அதன் பிறகு மீண்டும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அசுர வேகத்தில் செல்வதாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இது போன்ற வாகனங்களை ஆய்வு நடத்தி கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com