உலக தடகள போட்டி: பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
உலக தடகள போட்டி: பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
Published on

லண்டன்:

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. கடந்த 4-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது. இதில் அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

கடந்த முறை முதலிடம் பெற்ற கென்யா 5 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடம் பெற்றது. மொத்தம் 38 நாடுகள் பதக்க பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கடைசி நாளில் நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் கத்தார் வீரர் முடாஸ் எஸ்சா பார்ஷிம் 2.35 மீட்டர் உயரம் தாண்டி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென்ஆப்பிரிக்க வீராங் கனை கேஸ்டர் செமன்யா 1 நிமிடம் 55.16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 2-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான செமன்யா 2009-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கம் வென்று இருந்தார். பெண்களுக்கான 4ஜ்400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ரிலே) அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வென்றது. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் இடம் பெற்று இருந்த அலிசன் பெலிக்ஸ் உலக தடகள போட்டியில் அதிக பதக்கம் (11 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அவர் ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கம், 3 வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். இந்த போட்டியில் வழக்கம் போல இந்த முறையும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com