உத்தரபிரதேசத்தில் 17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் 24-ந்தேதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த உத்தரவில் அவர், “உத்தரபிரதேசத்தில் வாழும் காஷ்யப், ராஜ்பர், திவார், பிந்த் உள்பட 17 சாதியைச் சேர்ந்தவர்கள் இனி எஸ்.சி. சாதி பட்டியலுடன் சேர்க்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக முதல்-மந்திரி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில் அவர், “எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 17 ஜாதிகளை சேர்ந்த மக்களுக்கு உரிய சாதி சான்றிதழை வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கலெக்டர்கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இதற்கான அரசு உத்தரவு சமீபத்தில் வழங்கப்பட்டது. ஆதித்யநாத்தின் இந்த உத்தரவு திடீர் சர்ச்சையை உரு வாக்கியுள்ளது.

சாதி பட்டியலில் உத்தரபிர தேச மாநில அரசு செய்துள்ள மாற்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கு பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பாராளுமன்ற மேல்- சபையில் நேற்று இது தொடர்பான சர்ச்சை எழுந்தது. அந்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநில அரசின் முடிவை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி பேசினார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு 11 சாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்த்து சமாஜ்வாடி அரசு நடவடிக்கை எடுத்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த மாயாவதி அந்த உத்தரவை ரத்து செய்தார்.

தற்போது ஆதித்யநாத் திடீரென 17 சாதிகளை எஸ்.சி. பட்டியலுக்குள் கொண்டு சென்றுள்ளார். இதை எதிர்த்தும் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com