லாரியால் மோதி என்னை திட்டமிட்டு கொல்ல முயன்றனர் - உன்னாவ் பெண் பரபரப்பு தகவல்

உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் திட்டமிட்டு நடந்ததாக அவர் கூறி உள்ளார்.
உன்னாவ் பெண் கார் விபத்து
உன்னாவ் பெண் கார் விபத்து
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ. செங்கார் என்பவரால் கடந்த 2017-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டாள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் போது கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்குகள் உத்தரபிரதேச ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ. செங்கார், அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் உன்னாவ் பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அவரது கார் மீது லாரி ஒன்று மோதியதில் உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயம் அடைந்தனர். அவரது இரு உறவினர்களும் உயிரிழந்தனர். உன்னாவ் பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து உட்பட உன்னாவ் பெண் தொடர்பான 4 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. இதற்கிடையே உன்னாவ் பெண் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி உன்னாவ் பெண் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை சந்தித்தனர். அப்போது உன்னாவ் பெண் தன் மீது லாரி மோதிய விபத்து திட்டமிட்டு நடந்ததாக கூறி உள்ளார்.

தன்னை கொலை செய்யும் நோக்கிலேயே லாரி தங்களது காரை நோக்கி நேராக வந்து மோதியதாகவும், காரை ஓட்டிய வக்கீல் திறமையாக செயல்பட்டு இயக்கிய போதிலும் லாரி தங்களது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறி உள்ளார்.

அவரது இந்த புகார் வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் காயமடைந்த அவரது வழக்கறிஞர் தற்போதும் சுயநினைவில்லாத நிலையில் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com