புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது. #MasoodAzhar
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
Published on

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னர் இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.

இந்நிலையில், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான தகவலை இன்று வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அகபருதீன், மசூத் அசார் விவகாரத்தில் முன்னர் போட்டிருந்த முட்டுக்கட்டையை சீனா தற்போது விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 26-2-2019 அன்று பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய போர் விமானங்கள் பாலகோட் பகுதியிக் இருந்த பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழித்த பின்னர் பாவல்பூரில் உள்ள மர்கஸ் சுப்ஹான் அல்லாஹ் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி மசூத் அசார், சமீபத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாதுகாப்பான ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. #UNdesignates #JaisheMohammed #MasoodAzhar #globalterrorist

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com