லாரி மீது கார் மோதல்: சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது கார் மோதல்: சென்னையை சேர்ந்த 6 பேர் பலி
Published on: 

உளுந்தூர்பேட்டை:

அம்பத்தூர் பானுநகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 66). இவரது மனைவி சுகுணா (60).

சுகுணாவின் உறவினர் சாவித்திரி சேலம், சொர்ணபுரியில் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று மாலை இறந்தார்.

இதையடுத்து ரமேஷ், சுகுணா மற்றும் சாலிகிராமத்தில் வசித்து வந்த சுகுணாவின் சகோதரி உமா(56). அவரது கணவர் வெங்கடேசன் (58), அவர்களது மருமகள் அனுசுயா, சாவித்திரியின் தங்கை லட்சுமி (77) ஆகியோர் காரில் சேலத்துக்கு புறப்பட்டனர்.

வடபழனியை சேர்ந்த பிரசாந்த் (22) காரை ஓட்டினார். நள்ளிரவு 1 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த லட்சுமி, உமா, வெங்கடேசன், சுகுணா, ரமேஷ், கார் டிரைவர் பிரசாந்த் ஆகிய 6 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

அனுசுயா மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்த அனுசுயாவை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான அனுசுயாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டு ஆகிறது. நேற்று இரவு அவர்கள் சேலத்துக்கு புறப்பட்ட போது அனுசுயாவின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். இதனால் அவர் பஸ்சில் சேலத்துக்கு வருவதாக கூறியுள்ளார். அவர் உடன் செல்லாததால் உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com