உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
Published on

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர்தக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். இதையடுத்து ராஜீவ் காந்திக்கும், கல்பனாவுக்கும் திருமணம் நடை பெற்றது. அதன்பின்னர் ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி அவரது மனைவி கல்பனாவுடன் சென்றார். பின்னர் கல்பனாவை கள்ளக்குறிச்சியில் விட்டுவிட்டு ராஜீவ்காந்தி மட்டும் உளுந்தூர்பேட்டைக்கு பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகர் பகுதியில் ராஜீவ் காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ராஜீவ்காந்தி மீது மோதியது. இதில் ராஜீவ்காந்தி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். விபத்து குறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ராஜீவ்காந்தியின் மனைவி கல்பனா கர்ப்பிணியாக உள்ளார். திருமணமான 9 மாதத்தில் ராஜீவ்காந்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com