செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதைக்கு ஹோப் விண்கலம் திருப்பி விடப்பட்டது - விண்வெளி ஆய்வு மையம் தகவல்

டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

துபாய்:

டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது.

இது குறித்து முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஹோப்’ விண்கலம் 1,500 கிலோ எடை உள்ளது. இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விண்வெளியில் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும். இந்த விண்கலத்தில் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ‘டெல்டா-5’ என்ற திரஸ்டர் என்ஜின் உள்ளது. இதற்காக 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளே நிரப்பப்பட்டுள்ளது.

புவிவட்டப்பாதையில் இருந்து வெளியேறி செவ்வாய் கிரக பாதையை அடைய தேவையான உந்து சக்தியை இந்த என்ஜின் தருகிறது. இந்த ‘டெல்டா-5’ என்ற என்ஜினில் 6 திரஸ்டர்கள் எனப்படும் உந்து சக்தி அமைப்பு உள்ளது. அவைகள் இயக்கப்படும்போது வேகம் அதிகரிக்கப்பட்டு பாதையை திருப்பி விடவும் செய்ய முடியும்.

கடந்த ஜூலை 20-ந் தேதி ஜப்பான் நாட்டில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஹோப் விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலகி விண்வெளியில் பல லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பயணம் செய்து வருகிறது. இதன் அனைத்து கட்டுபாடுகளும் துபாய் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது.

தற்போது விண்வெளியில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் திருப்பி விடுவதற்காக டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டது. இதில் 6 திரஸ்டர்களும் இயங்கின.

அந்த என்ஜின் இயக்கப்பட்டதும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஏற்று ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. முதல் முயற்சியிலேயே தவறுகள் நிகழ்ந்துவிடாமல் மிகச்சரியாக ஹோப் விண்கலத்தின் பாதை சரிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com