

புதுடெல்லி:
புதிய மஹேந்திரா U321 மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சோதனை செய்யப்பட்ட புதிய எம்பிவி ரக கார் முன்னதாக சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
மஹேந்திரா நிறுவனத்தின் வட அமெரிக்க குழுவினர் தயாரித்துள்ள புதிய U321 முந்தைய டெஸ்டிங்கில் காணப்பட்டதை விட அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹேந்திரா ஸைலோ மாடலுக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய U321 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய டெஸ்டிங்கின் போது முழுமையாக தயாராகாத நிலையில், புதிய படங்கள் தயாரிப்பிற்கு தயாராகியுள்ளதை வெளிப்படுத்துகிறது. மஹேந்திரா U321 மாடலில் 8 ஸ்லேட் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முந்தைய XUV500 போன்றே புதிய மாடலிலும் மஹேந்திரா லோகோ பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டீல் ரிம்கள் அகற்றப்பட்டு புதிய ரக அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல்கள் பெரிய தோற்றத்திற்கு ஏற்றதாகவும், காரினை அழகாகவும் வெளிப்படுத்துகிறது.
இதன் டெயில் லேம்ப் மாற்றப்பட்டு முந்தைய மஹேந்திரா ஸ்கார்ப்பியோ மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே உயர்ந்த டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. புதிய U321 உள்புறம் பார்க்க இன்னோவா க்ரிஸ்டா போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் முன்பக்கம் இன்னோவா போன்று இல்லாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் புதிய மஹேந்திரா U321 சார்ந்த அதிகப்படியான தகவல்கள் அறியப்படவில்லை. எனினும், இதில் 2.0 லிட்டர் mHawk டர்போ-டீசல் இன்ஜின், 1.6 லிட்டர் பெட்ரோல் யுனிட் வழங்கப்படலாம். இவை மஹேந்திரா மற்றும் சங்யோங் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தவை ஆகும். தற்சமயம் இறுதிகட்ட பணிகளில் இருக்கும் U321 அடுத்த ஆண்டு வாக்கில் தயாரிக்கப்படுகிறது.
மஹேந்திரா U321 எம்பிவி மாடல் 2018-ம் ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய U321 விலை ரூ.10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.