

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). தனியார் மில்லில் பிட்டராக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் தமிழரசி (22) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே காதலர்கள் வீட்டை விட்டு வெளியே கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து காதலர்கள் சேர்ந்து வாழ அனுமதித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
வேடசந்தூர் ஆத்துமேடைச் சேர்ந்தவர் ஆனந்தி (22). இவர் நாககோனனூரைச் சேர்ந்த ரெங்கநாதன் (வயது 24) என்ற பெட்ரோல் பங்க் ஊழியரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
இவர்கள் காதல் விவகாரம் தெரிய வரவே ஆனந்தி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடிகள் சேர்ந்து வாழ இடையூறு செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 2 காதல் ஜோடிகள் பெற்றோருடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.