

அ.தி.மு.க. பிளவுபட்ட பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் அணியும், தினகரன் அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியது.
இதனால் இரட்டை இலை சின்னத்தை கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் கமிஷன் முடக்கியது. கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் போலீசில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டெல்லி போலீசார் தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.
2 நாள் விசாரணைக்கு பின் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைதானார். பின்னர் ஹவாலா ஏஜெண்ட்டுகள் நதுசிங், லலித்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரனின் டெலிபோன் உரையாடலை ஆதாரமாக டெல்லி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து தினகரனின் குரல் பரிசோதனைக்கு டெல்லி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
சுகேஷ் சந்திரசேகர் குரலை டெல்லி போலீசார் பதிவு செய்தனர். ஆனால் தினகரன் குரல் பரிசோதனைக்கு மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தினகரன் 69 நாட்களுக்கு பின்பு கோர்ட்டு ஜாமீன் அளித்ததால் விடுதலையானார். அதன் பிறகு டெல்லி போலீசார் கோர்ட்டில் முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சுகேஷ் சந்திரசேகர் பெயர் இடம் பெற்ற நிலையில் தினகரன் பெயர் இடம் பெறவில்லை.
இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில் தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் சேகரித்து வருகிறோம். அதன்பிறகு அடுத்த குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே தினகரன் குரல் பரிசோதனைக்காக டி.வி. பேட்டிகளில் இருந்து அவரது குரலை போலீசார் பதிவு செய்துள்ளனர். சில தொலைக்காட்சிகள் தினகரன் பேட்டி அளித்த வீடியோ ஒலிப்பதிவை போலீசாரிடம் அளித்துள்ளன.
அதில் இருந்து போலீசார் தினகரன் குரலை பதிவு செய்துள்ளனர். இந்த குரல் பதிவு, சோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் பேசிய ஆடியோவுடன், டி.வி. பேட்டி ஆடியோவும் நவீன தொழில் நுட்ப முறையில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இதில் சுகேஷ் சந்திரசேகருடன் பேசிய ஆடியோ குரல் தினகரனுடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.
தினகரன் குரல் உறுதி செய்யப்பட்ட அறிக்கை டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன்பு கிடைத்தது. இது தங்களுக்கு கிடைத்த கூடுதல் ஆதாரம் என்றும் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். தினகரன் சின்னம் பெற முயற்சி செய்தது இதன்மூலம் அம்பலமாகி இருப்பது டெல்லி போலீசார் கருதுகிறார்கள்.
இதன் அடிப்படையில் டெல்லி போலீசார் அடுத்த வாரம் 2-வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதில் தினகரன் பெயரும் இடம்பெறுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும். கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.