

புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாகூரை அடுத்த சேலியமேட்டில் கவிஞர் வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் பங்கேற்று விளையாடிய இரு அணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியின் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டது.
இதை அறிந்த சேலியமேடு பேட் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு அருகில் பாகூர்-வில்லியனூர் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் மற்றும் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.
இவர்களில் சிலர் அரங்கனூர் பா.ம.க. பிரமுகர் ஒருவரின் வீட்டின் முன்பு வைத்திருந்த கொடி கம்பத்தை சேதப்படுத்தியதுடன், பா.ம.க. பிரமுகரையும் வீடு புகுந்து தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வில்லியனூர் - பாகூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் அரங்கனூர் நோக்கி வந்தனர். இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கினர். இதனால் அப்பகுதி கலவர பூமியாக மாறியது. இதையடுத்து, போலீசார் 2 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அரங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு போட்டியாக அரங்கனூர் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
பின்னர் சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்தவர்கள் அரசு நூலகம் அருகே அம்பேத்கர் படத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த அரங்கனூரை சேர்ந்த 4 பேரை மறித்து தாக்க முயன்றனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அப்போது எதிரே சைக்கிளில் வந்த அரங்கனூரை சேர்ந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
இதை கண்ட போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரை போலீசார் வேனில் ஏற்றிச்சென்றனர். போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 4 முறை சாலைமறியல் சம்பவம் நடந்ததால் வில்லியனூர் - பாகூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கலவரம் காரணமாக சேலியனூர், அரங்கனூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்த 113 பேர் மீதும், அரங்கனூர் கிராமத்தை சேர்ந்த 113 பேர் மீதும் பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.