புதுவைக்கு சுற்றுலா வந்த 2 ஆந்திர வாலிபர்கள் கடலில் மூழ்கி பலி

புதுவைக்கு சுற்றுலா வந்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஒதியஞ்சாலை போலீசார் கடற்படை போலீசாரின் உதவியுடன் அவர்களது உடல்களை தேடி வருகின்றனர்.
Published on

புதுச்சேரி:

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 23).

முத்து தனது நண்பர் அல்தாப் மற்றும் 7 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களை நண்பர்களுடன் சென்று சுற்றிப் பார்த்தனர்.

பின்னர், பழைய துறைமுகம் அருகில் நண்பர்கள் கடலில் இறங்கி குளித்தனர். கடந்த சில நாட்களாக புயல் தாக்கம் காரணமாக புதுவை கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது.

இதனை அறியாத நண்பர்கள் கடல் அலைகளில் விளையாடியபடி குளித்தனர். அப்போது பெரிதாக எழும்பிய அலை ஒன்று முத்துவையும், அல்தாப்பையும் கடலுக்குள் இழுந்து சென்றது.

இதனை பார்த்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், மீட்க முடியவில்லை. அலைகளால் இழுத்து செல்லப்பட்ட அவர்கள் கடலில் மூழ்கி பலியாகி விட்டனர்.

தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து வந்து கடலில் மூழ்கியவர்களின் உடலை தேடினர். ஆனால் உடல்கள் கிடைக்கவில்லை. தொடர்ந்து உடல்களை கடற்படை போலீசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com