கொரோனாவை குணப்படுத்த முடியும்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் சந்தீப் நந்தூரி
கலெக்டர் சந்தீப் நந்தூரி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், உடல்வலி, மூச்சுத்திணறல், உடல் சோர்வு போன்றவைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிந்து விரைவாக சிகிச்சையை ஆரம்பித்து நோயை குணப்படுத்தி விடலாம்.

இது சாதாரண காய்ச்சல், சாதாரண இருமல், சாதாரண உடல்வலி மற்றும் உடல்சோர்வு என்று அஜாக்கிரதையாக இருந்து விட்டு 1 நாள், 2 நாட்கள் கழித்து சிகிச்சை மேற்கொள்ள வந்தால் கூட காப்பாற்றுவது கடினம்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த 80 வயது சித்த மருத்துவருக்கு கொரோனா அறிகுறிகள் கடந்த 24-ந் தேதி ஆரம்பித்து உள்ளது. அவர் சித்த மருத்துவர் என்பதால் தானகவே மருந்து உட்கொண்டு உள்ளார். அறி குறிகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால், கடந்த 27-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இதனால் டாக்டர்கள், அவரை ஆஸ்பத்திரியில் சேர அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் சித்தமருத்துவர் ஆஸ்பத்திரியில் சேர மறுத்து விட்டார்.

நேற்று பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அவருக்கு அறிகுறி ஆரம்பித்த உடனே சிகிச்சை பெற்று இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். இது முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. எந்த வயதினராக இருந்தாலும் கொரோனா நோய் அறிகுறி ஆரம்பித்தவுடன் பரிசோதனை செய்து கொரோனா உள்ளதா? என கண்டறிந்து முறையாக மருத்துவம் செய்து கொண்டால் உயிர் இழப்புகள் இல்லாமல் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com