

அ.தி.மு.க.வின் அணிகளை இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அதேசமயம் கட்சியையும், ஆட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்துவார் என்றும் மற்றவர்களை பற்றி கவலை இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆனால், கட்சியை வழிநடத்தும் இடத்தில் தான் இருப்பதாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், இது குறித்த விவரங்களை வருகிற 4-ந்தேதி அறிவிக்க இருப்பதாகவும் தினகரன் அறிவித்து உள்ளார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய டி.டி.வி. தினகரன் கொடுத்த 60 நாள் அவகாசம் வருகிற 4-ந்தேதி முடிவடைகிறது.
அவர் 5-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.முக. தலைமை கழகத்துக்கு வரப்போவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலருடன் ஆலோசனை நடத்தினார். இன்னொரு புறம் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இப்படி அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு தொற்றி இருக்கும் சூழ்நிலையில் தினகரன் இன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.