

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தினகரன் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் உங்கள் பேராதரவோடு நான் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து பா.ஜனதா தேர்தலை ஒத்தி வைக்க சதி செய்கிறது.
பா.ஜ.க.வின் ஒரே திட்டம் இத்தொகுதியில் நான் வெற்றி பெறக்கூடாது என்பது தான். பா.ஜ.க.வுக்கு இத்தொகுதியில் டெபாசிட் போய் விடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இத்தொகுதியில் நான் நல்ல மெஜாரிட்டியில் வெற்றி பெறுவேன் என்பதும் அவர்களுக்கு தெரிந்து விட்டது. எனக்கு கிடைத்துள்ள ‘பிரஷர்குக்கர்’ சின்னம் இத்தொகுதி மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, அவர்கள் மனதில் பதிந்த ஒரு சின்னமாக மாறி விட்டது.
அதனால் எனக்கு மகத்தான வெற்றி கிடைத்து விடும் என்ற ஆதங்கத்தில், பொறாமையில் ஆளுங்கட்சியினரும், பா.ஜ.க.வினரும் திட்டம் போட்டு எப்படியாவது எனது வெற்றியைத் தடுத்து விட முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறப்போவதில்லை.
எனது வெற்றி உறுதியாகி விட்டது. இன்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். அம்மா அறிவித்த ஸ்கூட்டி திட்டத்தை, அம்மாவின் பிறந்தநாளன்று அமல்படுத்தப் போவதாக தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன்னர் இதே தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது நான் அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளராகப் போட்டியிட்டேன். நான் வெற்றி பெற்றால் இத்தொகுதியிலுள்ள வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தேன்.
ஏழைகளுக்கு 57 ஆயிரம் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அம்மா தான் அறிவித்தார். அவர்கள் போட்டியிட்டபோது இந்த அறிவிப்பை அறிவித்தார். அதைத்தான் நானும் இங்கு கடந்த முறை போட்டியிடும்போது உறுதியளித்தேன்.
ஆனால் 6 மாதங்களுக்கு மேலாகியும் இத்தொகுதியில் ஆட்சியில் இருப்பவர்கள் வீடற்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை. அதற்கு அடிக்கல் நாட்டும் திட்டத்தைக் கூட அவர்கள் செயல்படுத்தவில்லை.
ஆட்சியில் இருப்பவர்கள் கட்சிக்கும், அம்மாவுக்கும் துரோகம் செய்தவர்கள். சென்னையோ அல்லது கோவையோ அல்லது கன்னியாகுமரியோ எந்த இடத்திற்கு சென்றாலும் இந்த துரோக ஆட்சி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். எனவே, இத்தொகுதியில் நான் வெற்றி பெறுவதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வழிவகுக்கும்.