

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 2-வது இடத்தை பிடித்தார். தி.மு.க. வேட்பாளர் உள்ளிட்ட 57 பேர் டெபாசிட் இழந்தனர்.
இந்த வெற்றியை தினகரன் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த வெற்றி குறித்து தினகரன் கூறும் போது, எங்களை ஆர்.கே. நகர் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எடப்பாடி- ஒ.பன்னீர் செல்வத்தின் மக்கள் விரோத ஆட்சியை விரைவில் அகற்றுவோம்’ என்று கூறினார்.
இதைதொடர்ந்து கடந்த 29-ந்தேதி சட்டசபைக்கு சென்று எம்.எல்.ஏ. வாக பதவியேற்று கொண்டார்.
எடப்பாடி அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் தினகரன் அணிக்கு தாவ போவதாகவும் தகவல் பரவியது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை அகற்ற தினகரன் அதிரடி வியூகத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டியும், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டியும் மன்னார்குடி அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலில் தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரினி இன்று சாமி தரிசனம் செய்தார்.
மன்னார்குடி-கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள வீரமணவாளன் கோவிலில் தினகரன் இன்று காலை 11-45 மணிக்கு வந்தார். பின்னர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வழியில் புதிய ஆட்சியை அமைப்பேன். சட்டசபையில் நான் என்ன பேச போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.