எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் அட்டைக்கத்தி வீரர்கள்: தினகரன் கடும் தாக்கு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அட்டைக்கத்தி வீரர்கள் என டிடிவி தினகரன் கடுமையாக சாடினார்.
எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் அட்டைக்கத்தி வீரர்கள்: தினகரன் கடும் தாக்கு
Published on

சென்னை:

சென்னையில் தினகரன் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

2017-ல் நாங்கள் பல சோதனைகளை சந்தித்தோம். எங்களுடன் இருந்தவர்களே துரோகிகளாக மாறுகிறார்கள்.

எங்களது பொதுச்செயலாளர் சசிகலா இப்போது எங்களோடு இல்லாத சூழ்நிலையிலும் நாங்கள் கடுமையாக போராடி 2017 இறுதியிலே ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் பெற்ற மாபெரும் வெற்றியானது கடந்த காலங்களிலே சந்தித்த சோதனைகளுக்கெல்லாம் ஒரு மருந்தாக இருந்தது.

2018 என்பது இன்றைக்கு தமிழகத்திலே நடைபெற்று கொண்டிருக்கிற மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் மக்கள் விரும்புகின்ற அம்மாவின் ஆட்சியை நாங்கள் நிச்சயம் கொண்டு வருவோம் என்ற உறுதியை எங்கள் தொண்டர்களுக்கும், கொடுத்திருக்கிறது.

இந்த இனிய புத்தாண்டிலே மக்கள் எதிர்பார்க்கிற அரசியல் மாற்றங்களும், அம்மா அரசாங்கமும் நிச்சயம் உருவாகும்.

எடப்பாடி பழனிசாமி, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுக்கு தலைவர் போலும். இவர் நினைப்பது எதுவும் நடக்காது. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி நினைப்பது எதுவும் நடக்காது. பகல் கனவு எடப்பாடி அணியினர்தான் காண்கின்றனர். தினகரன் காணுகின்ற கனவு அப்துல்கலாம் சொன்னது மாதிரி நல்ல ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்கு காணும் கனவு, அதன் முதல் படியாக ஆர்.கே.நகரில் ஜெயித்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி எல்லாம் பேசுவார். சட்டப்படி நான் வழக்குகளை எதிர்கொண்டு மாபெரும் வெற்றி பெறுவேன்.

இவர்கள் பெயரளவுக்கு தான் ஆளும் கட்சி. இவர்கள் எல்லோரும் அட்டைக் கத்தி வீரர்கள். இவர்கள் குருமூர்த்திக்கே பயந்து சாகிறார்கள். காக்கிச் சட்டையை பார்த்தாலே பயப்படுகிறவர்கள். வழக்கு என்றாலே பயப்படுபவர்கள். இவர்களை எதிரியாகவே நான் நினைக்கவில்லை. ஆட்சியில் இருப்பதால் இன்று ஹீரோவாக தெரிகிறார்கள். உண்மையிலே ஜீரோக்கள். இவர்களை எதிர்கொள்வது பெரிய வி‌ஷயமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com