போலீசுக்கு பயந்து பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி

சித்தையன்கோட்டையில் மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பால் வியாபாரி, போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் ரசூல்மைதீன் (வயது 38). பால் வியாபாரி. இவரது மனைவி ஜெசினாபானு (30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 22-ந்தேதி இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசூல்மைதீன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தனது மனைவியை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் தப்பியோடிவிட்டார்.

இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஜெசினாபானுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரசூல் மைதீனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் ரசூல்மைதீன், பட்டிவீரன்பட்டி அருகே சாலைபுதூர் என்ற பகுதிக்கு வந்தார். அப்போது அவர், அங்கு சாலையோரத்தில் இருந்த மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், தற்கொலைக்கு முயன்ற ரசூல் மைதீனை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ரசூல்மைதீன் தற்கொலைக்கு முயன்றது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார், செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செம்பட்டி போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று ரசூல்மைதீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை கொன்ற வழக்கில் தன்னை போலீஸ் தேடுவதால் பயந்துபோய் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதால், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com