ஆப்கான் அரசு - தலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் டிரம்ப்

தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபட் மற்றும் தலிபான் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Published on

தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபட் மற்றும் தலிபான் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில்  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவுகளில் ‘அவர்கள் (தலிபான்கள்) முக்கியமான இந்த அமைதி பேச்சுவார்த்தை காலத்தில்கூட போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அர்த்தமுள்ள எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது புரிகிறது.

எனவே சமாதான பேச்சுவார்த்தையை நான் உடனடியாக ரத்து செய்து விட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com