கார் மீது லாரி மோதி விபத்து - அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர்-கணவர் உள்பட 3 பேர் பலி

பவானி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை பெண் டாக்டர்-கணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
கார் மீது லாரி மோதி நின்ற காட்சி
கார் மீது லாரி மோதி நின்ற காட்சி
Published on

ஈரோடு:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி உடையானூர் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (53). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்திராணி (51). இவர் வனவாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு விகாஷினி (15) என்ற மகளும் இளமுகில் (11) என்ற மகனும் உள்ளனர்.

தேவநாதன் தனது மனைவி இந்திராணி மற்றும் தன்னுடன் வேலை பார்க்கும் மேச்சேரி சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் சத்தியசீலன் (24) ஆகியோருடன் ஒரு வேலை விசயமாக நேற்று காரில் கோவைக்கு சென்றனர்.

பின்னர் மீண்டும் அவர்கள் கோவையில் இருந்து மேச்சேரி திரும்பி கொண்டு இருந்தனர். காரை தேவநாதன் ஓட்டி வந்தார். கார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் சேவனூர் பிரிவு என்ற பகுதியில் நள்ளிரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரதில் கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரிக்குள் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த தேவநாதன் அவரது மனைவி டாக்டர் இந்திராணி மற்றும் சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி தெரிய வந்ததும் பவானி டி.எஸ்.பி. கார்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காருக்குள் இருந்த 3 பேர் உடல்களையும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்து நடந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதும் போக்குவரத்து சீரானது. மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விபத்து குறித்து பலியானவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்தில் பலியான சத்தியசீலனுக்கு சுகன்யா (22) என்ற மனைவியும், இஷாந்த் அத்வா என்ற 4 வயது மகனும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com