2-வது முத்தரப்பு டி20 போட்டி: மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. #AUSvsENG #T20TriSeries
2-வது முத்தரப்பு டி20 போட்டி: மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
Published on

ஹோபார்ட்:

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெசன் ராயும், அலெக்ஸ் ஹேல்ஸ்சும் களமிறங்கினர். ராய் 9 ரன்களில் கேன் ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் மலன் களமிறங்கினார். ஹேல்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மலன்-உடன் கேப்டன் மார்கன் ஜோடி சேர்ந்தார். மார்கன் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேக்ஸ்வெல் வீசிய பந்தில் வார்னர் வசம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சாம் பில்லிங்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மலன்-உடன் டேவிட் வில்லி ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய மலன் அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார்.

மேக்ஸ்வெல் வீசிய 16-வது ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்துகளில் மலன் 50 ரன்களிலும், வில்லி 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடில் ரஷித் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். குர்ரன், 17-வது ஓவரின் 2-வது பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மார்க் உட் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 16 ரன்களுடனும், மார்க் உட் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் கிளின் மேக்ஸ்வெல் 3 விக்கெட்களும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்களும், ஸ்டாயின்ஸ், ஆண்ட்ரூ டை, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்ததாக 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், டார்கி ஷார்ட்டும் களமிறங்கினர். வார்னர் 4 ரன்களிலும், கிறிஸ் லின் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஷார்ட் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். ஷார்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் வந்த ஸ்டாயின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் எதிர்முனையில் அதிரடியாக விளையாடிய மெக்ஸ்வேல் சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். ஆஸ்திரேலியா அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

அதிரடியாக விளையாடி சதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக வருகிற 10-ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #AUSvsENG #T20TriSeries

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com