திருவட்டாரில் யானை மிதித்து லாரி டிரைவர் பலி

குடிபோதையில் யானையிடம் தொந்தரவு செய்த லாரி டிரைவரை யானை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டாரில் யானை மிதித்து லாரி டிரைவர் பலி
Published on

திருவட்டார்:

திருவட்டார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருவர் 2 யானைகளை கட்டிப்போட்டு வளர்த்து வருகிறார்.  நேற்று நள்ளிரவும் அந்த இடத்தில் யானைகள் கட்டி போடப்பட்டு இருந்தது.  அப்போது திருவட் டார் செட்டிசார் விளையைச் சேர்ந்த ஜான்சேகர் (வயது 56) என்ற லாரி டிரைவர் அங்கு வந்தார்.

மகளை பிரசவத்துக்காக திருவட்டார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். மகளை பார்ப்பதற்காக வந்திருந்த அவர் குடிபோதையில் இருந்தார். நிதானம் இழந்த அவர் ஆஸ்பத்திரி அருகே கட்டி போட்டிருந்த யானைகள் அருகே சென்றார்.

யானைகளை தொட்டு தடவி அவற்றுக்கு தொந்தரவு கொடுத்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் யானை பக்கம் போக வேண்டாம் என எச்சரித்து சத்தம் போட்டனர். ஆனால் ஜான்சேகர் அதை கண்டு கொள்ளாமல் யானைகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு யானை ஜான் சேகரை  காலால் மிதித்து தள்ளியது.  தும்பிக்கையால் தூக்கி வீசியது. படுகாயம் அடைந்த அவரை  ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

லாரி டிரைவர் ஜான் சேகரை மிதித்து கொன்ற யானையின் பெயர் ஜெயப்பிரியா.  கடந்த 28 நாட்களுக்கு முன்பு தான் அந்த யானையை அதன் உரிமையாளர் மற்றொரு நபரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com