த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் எங்களைச் சந்தித்து பேசினார். தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாகப் போகலாம் என்றும் கூறினார்.
த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்
Published on

சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் அ.தி.மு.க.வில் வட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

கண்ணன் கொலை

ஐ.டி. நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 9. மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்ற போதும், கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியது.

கைது

இதனை ஆய்வு செய்த போலீசார், அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டு கால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவாவை, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அதேபோல், 2016-ல் பரணியின் தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி, நேரம் பார்த்து காத்திருந்து பழி தீர்த்துள்ளார்.

வாக்குமூலம்

கைதான பரணி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் “கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் எங்களைச் சந்தித்து பேசினார். தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாகப் போகலாம் என்றும் கூறினார்.

அப்போது நான் படிப்பில் கவனம் செலுத்துவதாகக் கூறி அவரை நம்ப வைத்தேன். ஆனால், என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடு விட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன்.

ஆன்மா சாந்தி அடைந்துள்ளது

அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது.” என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி

இதற்கிடையே கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறியதாக அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com