நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Raging floods in Nepal
Published on
Summary

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேபாள நாட்டின் இமயமலை எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக லெண்டே கோலா மற்றும் திரிசூலி ஆறுகளில் மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெருவெள்ளம் கிராமங்களையும், உட்கட்டமைப்புகளையும் அடியோடு அடித்துச் சென்று பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காணாமல் போன 2,500 நபர்களைத் தேடும் பணி

இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அந்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் காவல் துறையினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதிகள்

பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. பல இடங்களில் பாலம் மற்றும் சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதால், வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவமனைகளில் தட்டுப்பாடு

மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இன்றி மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

மீண்டும் உயரும் நதிநீர் மட்டம்

சன் கோஷி மற்றும் போடே கோஷி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் மீண்டும் திடீரென உயர்ந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடரும் மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை மீட்பு நடவடிக்கைகளுக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com