

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீஷன் கடந்த மாதம் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது குறித்து, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் அக்ஷர், எவ்வாறு பேட்டிங்கை தேர்வு செய்தார் எனக்கு புரியவில்லை”.
மேலும், “முதலில் பந்து வீசியவர்களுக்கு சாதகமாக ஆடுகளம் உள்ளபோது, டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு” என்று அஷ்வின் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸை இரண்டாவதாக பவுலிங் செய்ய அழைத்திருந்தால், டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி அணி, இம்பாக்ட் வீரராக இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் போரல்லை விளையாட அனுமதிக்காதது ஏன் என்றும் தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.