

திருச்சி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று (செவ்வாய்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய அளவில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. இதில் மாநகர் பகுதியில் 60 ஆயிரம் கடைகளும், புறநகர் பகுதியில் 30 ஆயிரம் கடைகளும் அடங்கும்.
இதேபோல் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி, துறையூர், டால்மியாபுரம், கல்லக்குடி, காட்டுப்புத்தூர், சோமரசம்பேட்டை உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,500 மருந்து கடைகள், 4 ஆயிரம் ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், பர்னிச்சர் கடைகள், காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணை, மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன. இது தொடர்பாக முன்கூட்டியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும் வெளியூரில் வந்திருந்த பஸ், ரெயில் பயணிகள் ஓட்டல்கள் திறக்கப்படாததால் அவதியடைந்தனர். இருந்தபோதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்காக நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக கூறினர்.
திருச்சி மாநகரில் அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி, சின்னக் கடை வீதி, பாலக்கரை, குஜிலிதெரு, மெயின்கார்டு கேட், தில்லை நகர், சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், அல்லிமால் தெரு, காந்தி மார்க்கெட், ஜங்ஷன், உறையூர், சத்திரம் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஒருசில டீக்கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தொடர்ந்து காலதாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று 21 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஒட்டு மொத்த வணிகர்கள் உறுதியுடன் தங்களது உணர்வினை வெளிப்படுத்தி வருகிறார்கள். வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டம் நிச்சயம் வெல்லும் என்றார்.