டி.என்.பி.எல்.: ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் 2 அணிகள்?

இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், லீக் சுற்று போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதிபெறும் இரண்டு அணிகள் எவை என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எல்.: ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் 2 அணிகள்?
Published on

சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இதுவரை ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

தூத்துக்குடி அணி தான் மோதிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 12 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் மதுரையை சந்திக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடக்கிறது.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி 20-ந் தேதி சென்னையில் நடக்கிறது. தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் விளையாடும். இந்த ஆட்டம் 18-ந் தேதி நெல்லையில் நடக்கிறது.

‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மற்ற 2 அணிகள் எவை? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை அணி 5 ஆட்டத்திலும் தோற்றதால் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது.

திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகளில் இருந்து 2 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும்.

திருவள்ளூர் வீரன்ஸ் 6 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் கோவை அணியை 12-ந் தேதி சந்திக்கிறது. அந்த அணி தகுதி பெற்றுவிடும். காரைக்குடி காளையும் இதே நிலையில் இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை நாளை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் காரைக்குடி காளை முன்னேறிவிடும்.

திண்டுக்கல் டிராகன்ஸ் 5 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சந்திக்கிறது. இதில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகள் தோற்க வேண்டும்.

கோவை கிங்ஸ் 3 புள்ளியுடன் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டம் உள்ளது. இந்த மூன்று ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த அணி மதுரை (இன்று), திருவள்ளூர் (12-ந் தேதி), திருச்சி வாரியர்ஸ் (14-ந் தேதி) ஆகியவற்றுடன் மோத வேண்டும்.

திருச்சி வாரியர்ஸ் அணி 2 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டத்திலும் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகள் தோற்க வேண்டும். அந்த அணிக்கான வாய்ப்பு மிக குறைவே.

பிளேஆப் சுற்றுக்கு நுழைய வேண்டிய இரு அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் வருகிற 16-ந் தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com