

பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள ஜனதா தளம் மற்றும் விவசாயிகள் கேரள-தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள வேலந்தாவளம், மீனாட்சிபுரம், கோபால புரம்,நடுப்புணி, கோவிந்தாபுரம் ஆகிய 5 இடங்களில் கேரள எல்லையில் இந்த மறியல் நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த போராட்டம் தொடங்கியது.
இதனால் தமிழக வாகனங்கள் கேரளா செல்லவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி சென்ற வாகனங்களும் செல்லவில்லை.
கேரள ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க. வினர் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கேளராவில் மறியலின் போது தமிழகத்தை சேர்ந்த 5 லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
கேரளாவில் ஜனதா தளம் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தவில்லை. ஆனாலும் அவர்கள் தமிழக சரக்கு வாகனங்களை கேரளாவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என கூறி உள்ளனர்.
இதனால் தமிழக வாகனங்கள் இன்று 2-வது நாளாக கேரளாவிற்கு செல்லவில்லை. அவைகள் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தாபுரம், மீனாட்சி புரம், கோபால புரம், நடுப்புணி, வேலந்தாவளம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வரை 15 கி.மீ. தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் லாரி டிரைவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
கோவை வாளையாறு வழியாக மட்டும் கேரளாவிற்கு தமிழக சரக்கு வாகனங்கள் சென்று வருகிறது. ஆனாலும் பதட்டம் நிலவுவதால் தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews