சட்ட பல்கலைக்கழக வெளிநாடுவாழ் மாணவர் சேர்க்கையில் ஊழல் - இளவரசி மகன் விவேக் மீது புகார்

தமிழ்நாடு அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் மாணவர்கள் சேர்க்கையில் இளவரசி மகன் விவேக் உள்பட 75 பேர் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்டுபிடித்துள்ளது. #LawUniversity
சட்ட பல்கலைக்கழக வெளிநாடுவாழ் மாணவர் சேர்க்கையில் ஊழல் - இளவரசி மகன் விவேக் மீது புகார்
Published on

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை சேர்க்க 15 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

15 சதவீத வெளிநாடுவாழ் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் வெளிநாடு வாழ் பெற்றோர், வெளிநாடு வாழ் பாதுகாவலர், வெளிநாட்டு நிதி உதவி செய்பவர் ஆகிய 3 பிரிவின் கீழ் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது உண்டு. இந்த இடஒதுக்கீட்டை பயன்படுத்திதான் முறைகேடுகள் நடந்துள்ளன.

கடந்த 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சட்டப்படிப்புகளில் மொத்தம் 93 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 18 பேரின் சேர்க்கைதான் முறையானதாக இருந்தது.

மீதமுள்ள 75 மாணவர்கள் சேர்க்கையில் தில்லுமுல்லு நடந்து இருப்பதை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அந்த 75 மாணவர்களும் போதுமான சான்றிதழ்கள், ஆவணங்கள் எதையுமே கொடுத்து படிப்பில் சேரவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த 75 மாணவர்களும் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு லஞ்சம் கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. போலி விசா மற்றும் வெளிநாடுகளில் வசிப்பது போன்ற போலி ஆவணங்கள் தயாரித்து இந்த தில்லுமுல்லு நடத்தப்பட்டுள்ளது.

75 மாணவர்கள் சேர்க்கையில் இந்த தில்லுமுல்லு நடந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் தலா ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்று இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த வகையில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிர அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போதைய துணை வேந்தர் வணங்காமுடி, பேராசிரியர் சர்வாணி, பதிவாளர் வி.பாலாஜி, துணை பதிவாளர் அசோக் குமார், இணை பேராசிரியர் ஜெய்சங்கர், நிர்வாக அதிகாரி ராஜேஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்தின் 30 உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்திலும் ஊழல் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உதவி பேராசிரியர்களிடம் இருந்தும் தலா ரூ.20 லட்சம் முதல் ரு.30 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளனர்.

இந்த லஞ்சப்புகார் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

வெளிநாடு வாழ் மாணவர்கள் போர்வையில் எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர்ந்த 75 பேரில் விவேக் ஜெயராமனும் ஒருவர் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இளவரசியின் மகனான இவர் ஜெயா டி.வி.யின் செயல் அதிகாரி ஆவார். சசிகலாவின் நெருங்கிய உறவினரான இவர் போலி ஆவணங்கள் கொடுத்து இந்த மோசடியை செய்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com