

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரிலும் செயல்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.